மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அமெரிக்க பாதுகாப்புப் படை ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களைப் பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டதில், மற்றொரு பெண் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரை தொலைத்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அரிசோனா மாகாணத்தை ஒட்டியுள்ள சர்வதேச எல்லையின் வடக்குப் பகுதியில் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர், லுக்கிவெல்லி எனும் பகுதியிலிருந்து 17 மைல் தூரத்தில் ஏழு வயது இந்தியச் சிறுமியின் உடலைக் கைப்பற்றினர்.
இதற்கிடையே, மீதமுள்ள இரண்டு பேர் மெக்ஸிகோவுக்குத் திரும்பிச் சென்றதை அலுவலர்கள் உறுதிசெய்தனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, டக்சன் தலைமை காவல் அதிகாரி சிறுமி உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.