வாஷிங்டன்: அமெரிக்க ராணுவப்படைகள் ஆப்கனை விட்டு வெளியேற தொடங்கியதிலிருந்து தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டனர். பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கிய பகுதிகள் அனைத்தும் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்களால் கைப்பற்றப்பட்டது. 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தாலிபான் ஆட்சிக்கு மறுப்பு தெரிவித்து ஆப்கன் மக்களும், மற்ற நாட்டு மக்களும் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். இதனிடையே, மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர்.
ஆப்கன் விமான சேவை ரத்து
இந்தப் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே, காபூல் நோக்கி கிளம்பிய விமானங்களும் வளைகுடா நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதேபோல, ஏர் இந்தியா நிறுவனமும் டெல்லி-காபூல் விமான போக்குவரத்தை ரத்து செய்து, சிகாகோ-டெல்லி கனெக்ட்டிங் விமான சேவையை கூட வளைகுடா நாட்டிற்கு திருப்பிவிட்டது.
இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் பல்வேறு நாட்டு மக்கள் தவித்தனர். ஆப்கனில் மீதமுள்ள அமெரிக்க ராணுவப் படையினர் காபூல் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனிடையே ஆகஸ்ட் 16ஆம் தேதி அமெரிக்க ராணுவ வீரர்கள், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
விமான ஓடுபாதைகளில் ஓடி, விமானங்களில் ஏற மக்கள் முயற்சிக்கும் காணொலிகளும் வெளிவந்தன. குறிப்பாக மூவர், விமானத்தில் தொங்கியபடி விமானத்தில் ஏறி கீழே விழும் காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி, பல்வேறு நாட்டினர் கோரிக்கை வைத்துவந்தனர்.
காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பு
அதையடுத்து ஆகஸ்ட் 17ஆம் தேதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக, காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பட்டுள்ளதாக பென்டகனின் கூட்டுத் தலைமை அலுவலர் ஹாங்க் டெய்லர் தெரிவித்தார். அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை மீட்டுவருகின்றனர்.
சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, இந்தியா இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவு இசைவு) அறிமுகப்படுத்தி இந்திய, ஆப்கன் மக்களை மீட்க முன்வந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், காபூல் விமான நிலையத்தில் 6,000 நாட்டை விட்டு வெளியேவதற்காக குவிந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது விமான நிலையத்தில் வெளியேறுவதற்காக 6,000 பேர் காத்திருக்கின்றனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற 5,200 ராணுவப் படையினர் உள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் இன்றுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்க குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: ஆவணமில்லாதவர்கள் வெளியேறுங்கள் - தாலிபான்கள்