கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து, 3ஆம் கட்ட மருத்துவச் சோதனையில் 90 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் மற்றொரு நிறுவனமான மாடர்னா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 94.5 விழுக்காடு பலனளிக்கும் வகையில் உள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஸ்டீபன் ஹோக் கூறுகையில், "இது வரலாற்றில் முக்கியத் தருணம். இரண்டு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளும் ஒரே மாதிரியான பலன் அளித்துள்ளது நல்ல விஷயம்.
தடுப்பு மருந்துகள்தான் இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தி நம்மை சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவும். எனவே, இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மாடர்னாவின் கரோனா தடுப்பு மருந்து மட்டும் போதாது. இன்னும் பல தடுப்பு மருந்துகள் தேவை" என்றார்.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மாடர்னா உருவாக்கியுள்ள இந்தத் தடுப்பு மருந்து, மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனையில் 30 ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டது. தடுப்பு மருந்து அளிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை ஆராய்ந்த ஒரு சுயாதீன கண்காணிப்புக் குழு, அவை 94.5 விழுக்காடு பலனிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனையில் பங்கேற்றவர்களில் 11 பேருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும், அவர்களைப் பரிசோதித்தபோது அவர்களுக்கு டம்மி தடுப்பு மருந்தே வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், இந்தத் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சோர்வு, தசை வலி ஆகியவை முக்கியப் பக்கவிளைவுகளாக இருந்தன. இதுபோன்ற பக்க விளைவுகள் அனைத்துத் தடுப்பு மருந்துகளுக்கு இருக்கும்.
இவ்விரு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளைத் தவிர பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட 11 தடுப்பு மருந்துகள் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளன.
இதையும் படிங்க: "ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது" - ஒபாமா