உலகெங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சர்வதேச அளவில் 10இல் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் பல ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் ஒன்பது கரோனா தடுப்பு மருந்துகள் மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை நிலையில் உள்ளது.
அவற்றில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மற்ற கரோனா தடுப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு முதல் மூன்று டோஸ்கள்வரை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை ஒரு முறை அளித்தாலே போதும், மனிதர்கள் உடலில் தேவையான எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும்.
இந்தச் சூழ்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட நபருக்கு திடீரென்று தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை (அக் 12) அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்களும் பாதுகாப்பு குழுவும் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்து அறிக்கையை சமர்பிப்பார்கள் என்றும் அதைப்பொறுத்து தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ளது.
பொதுவாக, ஒரு தடுப்பு மருந்தின் மருத்துவ சோதனைகள் நடைபெறும்போது, தன்னார்வலர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சோதனைகள் நிறுத்தப்படுவது இயல்பானது என்றாலும் கரோனா தடுப்பு மருந்தின் சோதனைகள் நிறுத்தப்படும்போது அது முக்கிய பேசுபொருளாக மாறுகிறது.
முன்னதாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கும் கடும் நரம்பியல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவ சோதனைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இதுவரை 3.8 கோடி பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: "90% பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாகவுள்ளது" - உலக சுகாதார அமைப்பு