கோவிட்19 பெருந்தொற்றுக்கு அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஆண்கள். இதில் பத்து பேர் நியூயார்க் நகரையும் ஒருவர் நியூ ஜெர்சியையும் சேர்ந்தவர். உயிரிழந்த 11 பேரில் நான்கு பேர் டாக்ஸி ஓட்டுனர்கள். இவர்கள் தவிர 16 இந்தியர்களும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நால்வர் பெண்கள்.
இந்த 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உலகை உலுக்கும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு 14 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகராக நியூயார்க் உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறாயிரம் பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் 1,500 உயிரிழப்புகளுடன் நியூ ஜெர்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.