ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு அரசுப் படைகளுக்கும் லிபிய தேசிய ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் லிபியாவிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 300க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல், திரிப்போலியிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ஐநா அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சார்லி யாக்ஸ்லி, இந்த விபத்தில் 150 பேர் பலியானதாகவும் 147 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 2019ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய கப்பல் விபத்து இது என்றும் கூறினார்.
முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில், லிபியாவில் உள்ள அகதிகள் முகாமில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது