ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் கிளிமாஞ்சாரோ. 5,895 மீட்டர் உயரமுள்ள இந்த கிளிமஞ்சாரோ, உலகிலேயே மிகவும் உயர்ந்த ஒற்றை மலையாகும் (உலகில் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் இமய மலைத்தொடரில் உள்ளது).
இந்நிலையில் கிளிமாஞ்சாரோவில் கேபிள் கார்களை அமைக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. மொத்த உயரமான 5,895 மீட்டர்களில் சுமார் 3,700 மீட்டர்வரை கேபிள் கார்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தான்சானியா தேசிய பூங்காக்கள் மேம்பாட்டு ஆணையத்தின் உதவி பாதுகாப்பு ஆணையர் பால் பாங்கா கூறுகையில், "இத்திட்டத்திற்கு தற்போது அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின் முதலீட்டாளர்களை தேட தொடங்குவதற்கு முன் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்கிறோம். மலை சிகரங்களில் கேபிள் கார்களை நிறுவுவது என்பது ஒன்றும் விநோதமான செயல் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.
கிளிமாஞ்சாரோ தான்சானியா நாட்டிலுள்ள ஒரு செயல்படாத எரிமலையாகும். ஆண்டுதோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் மலையின் உச்சியை அடைய முயற்சிக்கின்றனர்.
இதையும் படிங்க: 50% பெண் ஊழியர்கள் என்ற இலக்கை நோக்கி ட்விட்டர்