சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமர் அல் பஷீரை, அந்நாட்டு ராணுவம் அதிரடியாக ஏப்ரல் 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், அவருக்கு எதிராக போராடிய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இது தொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அவாத் இப்ன் ஊஃப் மூன்று மாதங்களுக்கு அவசர நிலை இருக்கும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவம் ஆட்சியை கவனிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் கார்டூமில் உள்ள ராணுவ தலையகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாதுகாப்புத் துறை அமைச்சரும், ராணுவ கவுன்சிலின் தலைவருமான அவாத் இப்ன் ஊஃப் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெனரல் அப்டெல் பட்டாஹ் பூர்ஹான், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், மனித உரிமைகள் காக்கப்படும் என உறுதியளித்ததோடு, அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் ஷாம்ஸ் அட்- டின் ஷான்டோ, "முறையான அரசு அமைய ராணுவம் தொடர்ந்து பாடுபடும். பிரதமரை எதிர்கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
இந்நிலையில், முன்னாள் அரசு அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது மீண்டும பதற்றத்தை அதிகரித்துள்ளது.