காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின்
காந்தியின் பேத்தி எலா காந்தி. இவர் மனித உரிமை ஆர்வலர். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில், பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
தொழிலதிபரிடம் காந்தியின் கொள்ளுப்பேத்தி மோசடி
நியூ ஆப்பிரிக்கா அலையன்ஸ் நிறுவன இயக்குனரான தொழிலதிபர் மகாராஜின் நிறுவனம் ஆடை, கைத்தறி மற்றும் பாதணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. மகாராஜின் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு 'லாபத்தில் பங்கு' அடிப்படையில் நிதியையும் வழங்குகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு தனக்கு சரக்குகள் வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு பணம் இல்லை என்றும் கூறி ஆஷிஷ் லதா ராம்கோபின், மகாராஜை அணுகியுள்ளார்.
இதற்காக லதா ராம்கோபின் மகாராஜிடம் 43,72,92,00 கோடி ரூபாய் (ஆறு மில்லியன் டாலர்கள்) அளவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்காக, இன்வாய்ஸ், மற்றும் சில ஆவணங்களை போலியாக உருவாக்கி மகாராஜிடம் காண்பித்துள்ளார். காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால் ராம்கோபினையும், இந்த ஆவணங்களையும் மகாராஜ் நம்பியுள்ளார்.
காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது தொழிலதிபர் வழக்கு
இதையடுத்து மகாராஜ் தரப்பில் ராம்கோபினுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மகாராஜ் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஆரம்பித்தபோது, லதா ராம்கோபின் 2,68,251 லட்சம் ரூபாய் (50,000 ரேண்ட்) கொடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை
இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று (ஜுன்.07) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக, பொய் தகவல் கூறி, போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை லதா ராம்கோபின் வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”மருத்துவர்,செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை” - மா.சுப்பிரமணியன்