தென்னாப்பிரிக்காவில் இளம்பெண்கள் மத்தியில் எச்ஐவி பரவுவதைத் தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர்கள் சலீம் அப்தூல் கரீம், அவரது மனைவி குவாரைஷா ஆகியோர் ஜோகன்னஸ்பர்க் நகரில் அமைந்துள்ள குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் எய்ட்ஸ் ஆய்வு மையம் நடத்திவருகின்றனர். பேராசிரியர்களின் இந்தச் சிறப்பான பங்களிப்பை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய, சர்வதேச அளவிலான பல விருதுகளைப் பெற அந்த இணையர் மறுத்துவிட்டனர்.
தற்போது, கரோனா குறித்த தென்னாப்பிரிக்க அரசின் ஆலோசனைக் குழுவின் தலைவரான பேராசிரியர் சலீம் அப்துல் கரீம், கேட்ஸ் அறக்கட்டளை அறிவியல் ஆலோசனைக் குழுவில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். எச்ஐவி தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அறிவியல் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், எய்ட்ஸ் மற்றும் கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் பேராசிரியர்கள் சலீம் அப்தூல் கரீம், அவரது மனைவி குவாரைஷா ஆகியோரை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், "பேராசிரியர்கள் இருவரின் குறிக்கோள் என்னைக் கவர்ந்தது. உலகில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்கர் என்ற புள்ளிவிவரம் பேராசிரியர்கள் சலீம் அப்தூல் கரீம், அவரது மனைவி குவாரைஷா ஆகியோரை எச்ஐவியை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியது" என்றார்.
எச்ஐவி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அப்தூல் கரீம் கூறியதாவது, "எச்ஐவிக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் புதிய வழிமுறை கண்டுபிடிப்போம் என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்து செயல்பட்டதன் விளைவாக நோய்த்தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடிந்தது.
இந்த மருந்து பாதுகாப்பானதா என்பதை எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்களுக்குச் செலுத்தி சோதனை செய்கிறோம். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் நான்கு மடங்கு அதிகமாக தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இந்தச் சோதனை வெற்றிபெற்றால், இந்த மருந்து ஆப்பிரிக்காவில் எச்ஐவி தொற்றுநோயின் போக்கை மாற்றும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியுங்கள், இடைவெளிவிட்டு நில்லுங்கள் - அசத்தும் ஜப்பான் ரோபோட்