சோமாலியா தலைநகர் மொகதீஷுவில் அமைந்துள்ள அந்நாட்டின் காவலர் பயிற்சியகத்தின் அருகே இன்று இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.
சோமாலியாவின் காவல் துறையினர் பலரும் அடிக்கடி வருகைத் தரும் உணவகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், உயிருக்கு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8 பேர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
சோமாலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அல்-ஷபாப் எனும் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருப்பதாக செய்தித் தொடர்பாளர் சாதிக் அதான் அலி தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவில் ஆட்சி அதிகாரத்திற்காக வன்முறைகளும், தீவிரவாத செயல்பாடுகளும் நிகழ்ந்து வருகின்றன.
முஹமத் சியட் பரே அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு வெடித்த உள்நாட்டு போரின் காரணமாக அல் ஷபாப் எனும் தீவிரவாத அமைப்பு அங்கே தலை தூக்கியது.
ராணுவத்தினர் மீதும், பொது மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை அல் ஷபாப் அமைப்பு நடத்தி வருகிறது.
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தும் அல்-ஷபாப் ஆப்பிரிக்காவில் மிக சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.
அல்-கொய்தா அமைப்புடன் இணைந்து அல்-ஷபாப் வெடிபொருள் தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டில், சோமாலியாவின் தலைநகரை விட்டு இந்த இயக்கம் வெளியேற்றப்பட்டாலும், அந்நாட்டின் மற்ற பகுதிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.