கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த மாநிலத்தில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வரும் வாகனங்களால் தான் புதுவையில் கரோனா பரவுகிறது என தமிழ்நாட்டிலிருந்து வரும் வாகனங்களை புதுச்சேரி அரசு மாநில எல்லையான முள்ளோடையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்களைத் தவிர, மற்ற யாரையும் மாநில எல்லைக்குள் அனுமதிக்காததால் நீண்ட வரிசையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் காத்திருக்கின்றன.
மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், சென்னைக்குச் செல்பவர்கள் என அனைவரும் வாகனத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
புதுச்சேரி அரசின் அத்தியாவசியப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும்; வேறு யாரும் தமிழ்நாட்டிலிருந்து வர வேண்டாம் எனவும் அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.