விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா கொங்கணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 20ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். கடந்த 22ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி, மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியதாக பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அவர் கூறி 9 நாள்கள் ஆகியும் எந்தவொரு நித உதவியும் அவர் கொடுக்கவில்லை என்று குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வண்ணார் பேரவையின் நிறுவனத் தலைவர் மணி பாபா ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு இதுவரை ராஜேந்திர பாலாஜி கூறியது போல் நிவாரண நிதி வந்து சேரவில்லை. ஒருவேளை இவர் கொடுத்து இருந்து அவர்கள் மறுத்து இருந்தால் அதனை பேட்டியாக அளித்திருக்க வேண்டும். அவர் அதனை செய்யாமல் நிதி கொடுத்து விட்டதாக கூறி குடும்பத்தாரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
பெற்ற மகளை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசு இது போன்ற மன உளைச்சலை ஏற்படுத்தியது நியாயமில்லை. மேலும் டெல்லியில் பாதிக்கப்பட்டு இறந்துபோன நிர்பயா வழக்கிற்கும், தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டு இறந்து போன பல் மருத்துவர் பிரியங்கா வழக்கிற்கும் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் பெரும் முக்கியத்துவம் கொடுத்தன.
ஆனால் விளிம்புநிலை தமிழ் சாதியில் இருந்து வந்த இந்த சிறுமிக்கு அப்படி எந்த கவனமும் அறிக்கையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர யாரும் கொடுக்கவில்லை. இதில் உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அமைச்சர் வழங்கியதாகக் கூறிய ரூபாய் 3 லட்சம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:
எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீடு, கடைகளில் போலீசார் திடீர் சோதனை