சென்னை: பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் தலைமையில் இன்று நந்தனம் ஆவின் இல்லம், தலைமை அலுவலகத்தில் ஆயவுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் ஆவின் இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை முதலிடமாக மாற்றவேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன.
இதில் 9,399 பால் கூட்டுறவு சங்கங்களில் 4.36 லட்சம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 4 கோடி பால் பொருள்கள் விற்பனையாகிறது. மேலும் 64 அதிநவீன பால் நிலையங்கள் மூலம் 10,700 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுகின்றனர். ஆவின் பால், பால் பொருள்களின் மாத விற்பனை ரூ.400 கோடி ஆகும்.
10 லட்சம் லிட்டர் பால், பால் பவுடர், வெண்ணையாக உருமாற்றம் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 30 லட்சம் ( 74 % ) லிட்டர் பாலும், 0.75 ஆயிரம் லிட்டர் பால், பால் பொருள்களாகவும் ( 2 % ), 10 லட்சம் லிட்டர் பால் வெண்ணை, பால் பவுடராகவும் ( 24 % ) விற்பனையாகிறது.
இதில் நிறை கொழுப்பு பால் மக்களிடையே 7 லட்சம் லிட்டர் ( 27 % ) அதிகம் சென்றடைகிறது, நிலைபடுத்திய பால் 10 லட்சம் லிட்டர் (38 %), சமன்படுத்திய பால் 8 லட்சம் லிட்டர் ( 31 % ) , இருநிலை சமன்படுத்திய பால் 1 லட்சம் லிட்டர் ( 4 % ) என நான்கு வகையான பால் விற்பனைசெய்யப்படுகிறது.
பாக்கெட் பால் விற்பனை விநியோகம் நாளொன்றுக்கு 26 லட்சம் லிட்டர் ( 87 % ) ஆகவும், உதிரிப் பால் விற்பனை விநியோகம் 4 லட்சம் லிட்டர் ( 13 % ) ஆகவும் உள்ளது.
155 மருத்துவர்கள் மூலம் கால்நடைகளுக்கு அவசர மலட்டு நீக்க சிகிச்சை அளிப்பதன் மூலம் 16 லட்சம் கால்நடைகள் பயனடைகின்றன. வெளிச்சந்தையில் வாங்கப்படும் கால்நடைத் தீவன விலையை ஒப்பிடுகையில், 25 சதவீதம் குறைத்து கிலோ ரூ .18.50 என குறைந்த விலையில் ஆவின் மூலம் வழங்கப்படும். தீவனத்தால் 4.36 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைகின்றனர். தாது உப்புக்கலவையின் வெளிச்சந்தை விலையில் 50 % குறைத்து கிலோ ரூ.50-க்கு ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் தீவன புல் விதை, கரணைகள் தீவனப் பயிர் விதைகள் விற்பதன் மூலம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பான வகையில் சேவையாற்றி வருகிறது.
விரிவாக்க திட்டம்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் ரூ.227 கோடி மதிப்பிலும், நபார்டு வங்கி மூலம் ரூ.180 கோடி மதிப்பிலும், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் மூலம் ரூ .21 கோடி மதிப்பிலும், பால் பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் ரூ .687 கோடி மதிப்பிலும், ஒருங்கிணைந்த பால் பண்ணை மேலாண்மை திட்டம் மூலம் ரூ .18 கோடி மதிப்பிலும், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும்வகையில், மாதாவரம் பால்பண்ணையில் ரூ .142 கோடி செலவில் 10 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பண்ணையாக விரிவு படுத்தும் திட்டம், சேலம் பால் பண்ணையில் 7 லட்சம் லிட்டர் பால்பத திறன் விரிவாக்கம் மற்றும் 30 மெட்ரிக் டன் பால் பவுடர் திறன் ரூ .140 கோடி மதிப்பிலும், தஞ்சாவூர் பால்பண்ணையில் 1 லட்சம் லிட்டர் பால்பத திறன் ரூ .53 கோடி செலவிலும், திருச்சி பால்பண்ணை 6000 லிட்டர் ஐஸ் கிரீம் தயாரிக்கும் திறன் ரூ .43 கோடி மதிப்பிலும் , சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால்பண்ணை விரிவாக்கம் ரூ .71 கோடி மதிப்பிலும், செயல்படுத்தப்பட உள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பால், பால் உபபொருள்களை விரும்பி கேட்பதால் அவர்களை மையப்படுத்தி விற்பனை அதிகரிக்கப்படும். அனைத்து பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கும் பொதுவான துணை விதிகள் உருவாக்கப்படும். மேலும் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயம் ( e - governance ) ஆக்கப்படும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம்
பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமானால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய இயலும் . இதனால் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்படும். அதிநவீன தொழில்நுட்பம் மிக்கதாக ஆவின் நிறுவனத்தை மாற்ற ஆவின் நிறுவன அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆவினில் செயல்படக்கூடிய 25 கூட்டுறவு ஒன்றியங்கள் அனைத்தும் தங்களுடைய மனித ஆற்றலின் மூலம் விற்பனையை அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும். பால்வளத்துறை, ஆவின் நிறுவனத்தை மற்ற துறைகளுக்கு வழிகாட்டியாக மாற்றும் பொறுப்பு அலுவலர்களிடம் தான் உள்ளது . எனவே ஆவின் துறையை சிறப்பாக செயல்படுத்துவது நம் கையில்தான் உள்ளது” என்று பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் T.S. ஜவஹர், ஆணையர், மற்றும் மேலாண்மை இயக்குநர் K.S. கந்தசாமி அவர்கள் மற்றும் ஆவின் பொது மேலாளர்கள், துணை மற்றும் உதவி பொது மேலாளர்கள், ஆவின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.