சென்னை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில், பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
2019 ஜனவரி 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிடவும், தண்டனை வழங்கியிருப்பின் அவற்றை ரத்து செய்திடவும், குற்றவியல் வழக்குகளைக் கைவிடவும் அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மேற்கொண்ட நடவடிக்கையை வரவேற்கிறோம்.
அதன் முழுமையான பயன் ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன.
பல மாவட்டங்களில் கீழ்நிலை அலுவலர்கள் 2019 ஜனவரி 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற நாள்களை பணிக்காலமாக முறைப்படுத்த மறுத்து வருகின்றனர்.
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தின்போது ஒழுங்கு நடவடிக்கையாகப் பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்துவிட்டு, அவர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்பு பணியாற்றிய இடத்திற்கு மீண்டும் பணி வழங்கிடவும் மறுத்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் கேட்டால், பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறை ஆணையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே வேலைநிறுத்தக் காலம் ஊதியமில்லா விடுப்புக் காலமாகக் கருதப்பட்டுள்ளது. இது போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்குப் பல்வேறு தொடர் இழப்புக்களை ஏற்படுத்திவருகிறது. எனவே, தற்காலிகப் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதுபோல், வேலைநிறுத்தக் காலத்தையும் பணிக்காலமாக முறைப்படுத்திட கீழ்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது மாநிலம் முழுவதும் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய இடத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு தங்கள் வசிப்பிடத்திலிருந்து நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதற்காக மேற்கொள்ளப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்து, வேலை நிறுத்தத்திற்கு முன்பு பணியாற்றிய இடத்திற்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.