தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ளது புராணசிங்குபாளையம் கிராமம். இக்கிராமத்தின் பாதி பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும், மீதி பாதி தமிழ்நாட்டிற்கும் சொந்தமானது. தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள புராணசிங்குபாளையத்தில் வசிப்பவர் ஆர். மணிகண்டன். இவர் தனது பள்ளிப் படிப்பை புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் படித்துள்ளார். அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதினார்.
கூலித்தொழிலாளியின் மகனான மணிகண்டன் 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் 170 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து படித்த அவர், 2020ஆம் ஆண்டுத் தேர்வில், 500 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 86 ஆயிரத்தை 541ஆவது இடத்தைப் பிடித்தார்.
மணிகண்டன் வசிக்கும் பகுதி தமிழ்நாடு எல்லைக்குள் வருவதால் என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். மணிகண்டன் புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வியை முடித்ததால் அவரது விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது.
தமிழ்நாட்டில் பிற மாநில மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் அரசு பள்ளியில் தொடர்ந்து படித்தால் அவர்கள் தமிழக குடியுரிமை பெற்று பொதுப்பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே விதிமுறைகள் புதுச்சேரி அரசில் இருந்தாலும் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க விதிமுறை இல்லை. எனவே அவர் புதுச்சேரி அரசின் மூலம் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்க்கைக்காக சென்டாக்குக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை. இதனால், அரசு பள்ளியில் பயன்றும் மாநில எல்லை பிரச்சினையால் மணிகண்டனின் மருத்துவக் கனவு பாதிக்கப்பட்டள்ளது.