இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்றினால் உலகப் பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில், எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
கோவிட்-19 பேரிடரிலிருந்து பொருளாதார ரீதியாக மீட்சி பெற முயற்சி செய்யும் நம் நாட்டின் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் எச்-1பி விசாவில் 75 விழுக்காட்டினர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரித்திட வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்திருந்தாலும்; அந்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு பெரும்பங்களித்து வரும் இந்தியப் பணியாளர்களுக்கு, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திட வேண்டும்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பாஜக அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்திட வேண்டும். இரு நாடுகளின் பொருளாதார மற்றும் தூதரக உறவை மேம்படுத்திடும் வகையில் இந்த முடிவை திரும்பப் பெற்று அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.