ஹைதராபாத்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், லியோ. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ - லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். லியோ திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவலாக உருவாகி உள்ளது.
மேலும், ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸிலும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே, அதிக அளவில் வசூல் பெற்று சாதனை படைத்தது. முதல் நாள் வசூலில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. உலக அளவில், இந்திய படம் பெற்ற அதிகபட்ச வசூல் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பண்டிகை நாட்கள் என்பதால், லியோ படம் நல்ல வசூல் சாதனை பெறும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், லியோ படம் வெளியாகி இன்றுடன் 6 நாட்கள் ஆன நிலையில், இந்தியா முழுவதும் ரூ.250 கோடி வசூலை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் ரூ.64.8 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.35.25 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.39.8 கோடியும், நான்காவது நாளில் ரூ.41.55 கோடியும், ஐந்தாவது நாளில் ரூ.35.19 கோடியும், ஆறாவது நாளில் ரூ.30.63 கோடியும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலைத் தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் நிறுவனம் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லியோ படம் நல்ல வெற்றியைத் தந்து, அதிக அளவில் வசூல் சாதனையைப் படைத்து உள்ளது என போஸ்டர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” - இயக்குநர் வசந்தபாலன்