சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டம் நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில், சிம்பு நடிப்பில் 2016-இல் திரைக்கு வந்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்த படம் எதிர்பாராத வெற்றியை பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.
இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனைத் திருப்பித் தருமாறு சிம்பு தரப்பை பலமுறை தொடர்பு கொண்டும் எந்த வித முடிவும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவிற்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.
இதனால் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பலமுறை புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிம்புவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை முடிவடையாத நிலையில், சிம்பு மீது நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாமல் இருந்தது தொடர்பாகவும், நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியது குறித்தும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில், நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் இருப்பதாக, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட நடிகர்கள் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரையில் நடிகர்கள் மீது ரெட் கார்டு விதிப்பு என்பது இல்லை என்றும், நடிகர்கள் சிம்பு, தனுஷ், அதர்வா மற்றும் விஷாலுக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்று சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேசிய விருது பெற்ற கடைசி விவசாயி படத்தை முதல்வர் பாராட்டினாரா?... இயக்குநர் பேரரசு கேள்வி!!