சென்னை: இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' திரைப்படம் வருகிற 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.
லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனின் தயாரிப்பில் இயக்குநர் பி.வாசுவின் 65வது படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை தோட்டா தரணி கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.
ஜி.கே.எம்.தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் திட்டமிட்டபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தை, ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது, 'சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெறும்' என ராகவா லாரன்ஸிற்கு ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் வழங்கிய இருக்கிறார்.
இதையும் படிங்க: "விஷால் பேசியதும் சனாதனம் தான்"! எனக்கு என்டே கிடையாது பட தயாரிப்பாளர் காட்டம்!
கடந்த வாரமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் ரசிகர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே 'சந்திரமுகி 2' படத்தின் தெலுங்கு பதிப்பினை ரசிகர்களிடையே விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
மேலும் படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Waheeda Rehman : பழம்பெரும் நடிகை வஹிதா ரகுமானுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!