சென்னை: சென்னையில் நேற்று அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தைச் சேர்ந்த உறூப்பினர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், ஆலோசனைக்குப் பின் பல்வேறூ முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்ட் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஏற்கனவே பலமுறை புகார் அளித்து, பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில், இந்த பிரச்னையை மேற்கோள்காட்டி சிம்புவுக்கு ரெட் கார்ட் வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக ரெட் கார்ட் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல், நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாக ரெட் கார்ட் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இறுதியாக தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காததால் அவருக்கும் ரெட் கார்ட் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் மதியழகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அதர்வா நடித்து தயாரித்த ’செம போத ஆகாதே’ என்ற படத்தை எனது எக்ஸெட்ரா நிறுவனம் மூலம் வெளியிட்டேன். வெளியீட்டின் மூலம் எனக்கு 4 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதனை அதர்வாவிடம் கேட்டபோது அவர் பணத்தை தரவில்லை.
அதனைத் தொடர்ந்து அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் புகார் அளித்தேன். பல மாத போராட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தைக்கு வந்தார். பேச்சுவார்த்தையில் வேறு படம் நடித்து தருவதாக அதர்வா உறுதி அளித்தார். ஆனால், அதற்கும் ரூ.45 லட்சம் முன்பணமாக பெற்றார். அப்போதும் நஷ்டமான பணத்தை தரவில்லை. அதன் பிறகு அப்படத்தின் இயக்குநரை டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
அதனால் அந்த இயக்குநர் அதர்வாவை வைத்து படம் பண்ண மாட்டேன் என்று சென்று விட்டார். இப்போது எனக்கு பழைய நஷ்டப் பணமும் வரவில்லை. முன்பணமாக கொடுத்த பணமும் கிடைக்கவில்லை. இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அங்கேயும் அரசியல்வாதியை வைத்து தப்பித்து விட்டார். இதனால் இது சினிமா விவகாரம், நீங்களே சங்கத்தில் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக முரளி ராமசாமி உள்ளார். அவரிடமும் புகார் அளித்தேன். அதர்வாவிற்கு பணத்தை திருப்பித் தர திட்டமில்லை. அவரது ஒவ்வொரு படம் வெளியீட்டின் போதும் நல்லவர்போல் நடித்து அவரது அப்பா முரளியின் பெயரை வைத்து தப்பித்துக் கொள்கிறார். மீண்டும் ஒரு முறை அதர்வாவை பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைத்தபோது அவர் மதிக்கவில்லை.
நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எனது புகாரை தெரிவித்தேன். மற்றொரு தயாரிப்பாளர் பணம் தராத காரணத்தால் அந்த படத்தின் டப்பிங் செய்யாமல் அதர்வா சென்று விட்டார். அந்த தயாரிப்பாளர் இவரால் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், அதர்வா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அப்பா முரளியின் பெயரை வைத்து தப்பித்து கொள்கிறார்.
ரெட் கார்டு என்பது கிடையாது. அப்படி யாருக்கும் போட முடியாது. புகாரின் மீது சம்பந்தப்பட்டவர்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் அளிப்பார்கள். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நடிகரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளரிடம் அவர் குறித்து சங்கத்தில் இருந்து தெரிவிப்பார்கள்.
இந்த தயாரிப்பாளரிடம் குறிப்பிட்ட நடிகருக்கு இது போன்ற பிரச்சனை உள்ளது. அந்த நடிகரை வந்து பேசச் சொல்லுங்கள் என்பார்கள், அவ்வளவு தான். எனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.6 கோடி வரை தர வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி அதர்வா அரசியல் பிரமுகரை வைத்து மிரட்டும் தோனியில் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "காவிரி நீருக்கும் ரஜினிக்கும் சம்மந்தம் இல்லை" - சத்தியநாராயண ராவ் திட்டவட்டம்!