சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானதையடுத்து, அதில் விஜய் பேசியிருந்த ஆபாச வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
ட்ரைலரில் விஜய் பேசும் ஆபாச வசனம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு முன்னணி நடிகர் இது போன்ற செயலை செய்யலாமா என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், குழந்தைகள் அதிகம் விரும்பும் நடிகரான விஜய் இதுபோல் செய்யக்கூடாது என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நானியின் 'ஹாய் நானா' படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!
ஏற்கனவே இப்படத்தில் ஒரு பாடலில் சிகரெட், கஞ்சா போன்ற வரிகள் இருந்ததை பலரும் விமர்சித்த நிலையில், தற்போது ட்ரைலரில் ஆபாச வசனம் இடம் பெற்றிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, ட்ரைலரில் இடம் பெற்றிருந்த அந்த ஆபாச வார்த்தையானது கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் மிகவும் தேவைப்பட்டது என்றும், நடிகர் விஜய் இந்த வசனத்தை பேசலாமா என்று தன்னிடம் தயக்கத்துடன் கேட்டதாகவும், ஆனால் கதாபாத்திரத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது என்று, தான் அழுத்தமாக கூறியதாலேயே நடிகர் விஜய் அந்த வசனத்தை பேசியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதனால் இந்த ஆபாச வசனத்திற்கும், நடிகர் விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு உண்டான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். மேலும் தனக்கும், விஜய்க்கும் கருத்து வேறுபாடு என்ற தகவல் பரவியது குறித்து இருவரும் சேர்ந்து பார்த்து சிரித்துக் கொண்டதாகவும் கூறினார். லியோ படத்திற்கு முதலில் ஆண்டனி என்று பெயர் வைக்க நினைத்ததாகவும், அதன் பிறகே லியோ என மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.