சென்னை: வழக்கமான பாலாபிஷேகம், டிஜே பாட்டுடன் கூடிய நடனம், பட்டாசு வெடிப்பு, இனிப்பு வழங்குதல் என இருந்த திரைப்படங்களின் ரிலீஸ் கொண்டாட்டம், இன்று திருமணம் வரை சென்றுள்ளது என்றால், திரைப்படக் கொண்டாட்டங்களுக்கு எல்லையே இல்லை என்றுதான் கூற வேண்டும். அதிலும், சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீட்டின்போது இப்படியான சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தனது திரைக்கதைகளின் வாயிலாக பலதரப்பட்ட ரசிகர்களையும் தன்வசப்படுத்தும் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ஆகியோரது 2வது கூட்டணியில் உருவாகி, இன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம், லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
லோகேஷின் கைதியைத் தொடர்ந்து வெளியான விக்ரம் திரைப்படம், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கோட்பாட்டை உருவாக்கியது. எனவே, லியோ படமும் LCU-வில் இணையுமா என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். இதற்கு தற்போது பலருக்கும் பதில் கிடைத்து விட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், ஒரு தமிழ் சினிமா நடிகரின் திரைப்படம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் காலை 4 மணி முதல் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.
திரையரங்குகளில் பிரபலங்கள்: இவ்வாறு வெளியான காட்சிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆகியோர் வெடி வெடித்தும், டிஜே போட்டு நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில், திருச்சியில் கறுப்பு நிற உடை அணிந்த நபர்கள் பாடலுக்கு குழுவாக நடனம் ஆடினர். அதிலும், கோவையில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை விஜய் ரசிகர்கள் சாலையில் உடைத்தனர்.
மேலும், தேனியில் ஓடும் காரின் மீது அமர்ந்தவாறு சிறுவர்கள் நடனமாடினர். இதனிடையே, லியோ படக்குழுவினரான லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். மேலும், தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் ஆகியோர் ஒரு குழுவாகவும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது குடும்பத்தினர் உடனும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெவ்வேறு இடங்களிலும் லியோ திரைப்படத்தைப் பார்த்தனர்.
லியோ கொண்டாட்டம்: அதேநேரம், லியோ படத்தின் ட்ரெய்லர் காட்சி திரையிடலின்போது மிகுந்த சேதத்திற்குள்ளான சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில், காலை 11 மணி காட்சிதான் முதல் காட்சி என்பதால், ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், மதுரையில் நடனமாடிக் கொண்டே இருந்த ரசிகர் ஒருவர் மயக்கம் அடைந்தார். அதேபோல், கிருஷ்ணகிரியில் திரையரங்கத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை தாண்டிச் செல்ல முயன்ற நபர் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளின் வெளியே ரூ.2,000 வரை டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற சில நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், கோவையில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தார். இவ்வாறு பல்வேறு இடங்களில் மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வெளியான லியோ, ஒரு புதுமையான கொண்டாட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேற்றியுள்ளது.
திரையின் முன்னால் திருமணம்: புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும், புதுக்கோட்டை, வடக்கு 3ஆம் வீதியை சேர்ந்தவரான மஞ்சுளா என்ற பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தீவிர விஜய் ரசிகர்களான இவர்களுக்கு, நடிகர் விஜய்யின் தலைமையில் திருமணம் நடைபெற வேண்டும் என ஆசை இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் எண்ணத்தில், திரையில் விஜய் தோன்றும்போது திருமணத்தை நடத்த இருவரும் திட்டமிட்டு, இதனை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பர்வேஸ்-யிடம் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, இன்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் படம் வெளியான நேரத்தில், விஜய் திரையில் தோன்றியபோது இருவரும் ரசிகர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் நாளை (அக்.20) இந்து முறைப்படி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Leo Release: கட்டுப்பாடுகளால் களையிழந்த ரோகிணி திரையரங்கம்!