சென்னை: தமிழ் சினிமாவில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செய்து காட்டிய படம்தான் 16 வயதினிலே. முன்பு நம் தமிழ் சினிமாக்கள் அனைத்தும், படப்பிடிப்பு அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்தன. பின்னர் அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.
இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு, ஏறக்குறைய அத்தனை இயக்குநர்கள் பார்வையும் கிராமங்கள் பக்கம் திரும்பியது. மேலும், இப்படத்தின் சாயலில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டன. பாரதிராஜா என்ற ஒற்றை மனிதனின் சினிமா வேட்கைக்கு சரியான தீனி போட்ட படம்தான் இந்த 16 வயதினிலே.
ஒரு நல்ல சினிமா என்ன செய்யும் என்பதை எல்லோருக்கும் உணர்த்தியது இப்படம். தொடர்ந்து, இப்போதும் அனைவரது மனதிலும் மறக்க முடியாத படமாக இது இருப்பது, பாரதிராஜா என்னும் கலைஞனின் ஆகச் சிறந்த சாதனை. அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த கமல்ஹாசனை சப்பாணியாக கோவணம் கட்ட வைத்திருந்தார், பாரதிராஜா.
மேலும், மயில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரீதேவியின் எதார்த்தமான நடிப்பு, திரையில் அவரின் மொத்த அழகையும் வெளிப்படுத்தியது. தொடர்ந்து, படத்தில் இளையராஜா இசை, பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஆனால், இத்தனை சிறப்பு வாய்ந்த இப்படத்துக்கு எல்லா நல்ல படங்களைப் போலவே சோதனைகள் காத்துக்கொண்டு இருந்தது.
16 வயதினிலே திரைப்படம் முடிந்த பிறகு அந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஆனால், விநியோகஸ்தர்கள் எவரும் இந்த திரைப்படத்தை வாங்க முன்வரவில்லை. என்னதான் புகழ் பெற்ற நடிகர்கள், இளையராஜா என பிரமாண்டமாக திரைப்படம் அமைந்தாலும், கமல்ஹாசன், படத்தில் சப்பாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பெரும் எதிர்மறை எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்தது.
பெண்கள் மனம் கவர்ந்த நாயகன் சப்பாணி வேடத்தில் நடித்திருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும், இந்த திரைப்படம் வெற்றி பெறுமா என்பதுமான தயக்கம்தான் காரணமாக இருந்தது. எனவே, யாரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை. ஆனாலும், மனம் தளராத தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சொந்தமாக படத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, படம் வெளியாகி 175 நாள் ஓடி மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெற்றது.
எங்கு பார்த்தாலும் 16 வயதினிலே பற்றிய பேச்சுதான். அந்த அளவு மக்கள் மனதில் இடம் பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது இப்படம். ரஜினி மற்றும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல கமல்ஹாசன் நடிப்பை பார்த்து மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்தனர். இப்படத்தை முதலில் மயிலு என்றுதான் எடுக்க நினைத்தார், பாரதிராஜா. அதுவும் கருப்பு, வெள்ளையில் நாகேஷை வைத்து எடுக்க திட்டமிட்டார்.
பின்னர், கலரில் எடுக்க முடிவெடுத்து கமல்ஹாசன் உள்ளே வந்தார். அதன்பிறகு படத்தின் உயரம் வேறு தளத்திற்குச் சென்று விட்டது. தான் பள்ளியில் படிக்கும்போது, தனது ஊரில் உள்ள பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், ஆனால் அந்த பெண் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்றும், அதன் தாக்கமே மயில் கதாபாத்திரம் உருவாக காரணம் என்றும் பாரதிராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில், “நிஜத்தில் நிறைவேறாத எனது காதல் படத்திலாவது நிறைவேறட்டும் என்று வைத்தேன். கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஷூட் செய்யச் சென்றோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைத்தது. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய் விரித்துப் படுத்துக்கிட்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது. 24 மணிநேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருப்பார்.
மேலும், என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் (Favorite Dress) வெள்ளைத் தாவணியில் 'செந்தூரப்பூவே...' பாடலைப் பாடும்போது, அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டை அசைத்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாகிப் போனேன். அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை” என்றார். மேலும், “16 வயதினிலே படத்துக்காக அதிக சம்பளம் கமலுக்குத்தான். அப்போதே அவருக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம்.
பரட்டை கேரக்டருக்கு (Character) ஆள் தேடியபோது, ஒரு பைக்கில் வந்து இறங்கினார் ரஜினி. யார் என விசாரித்தபோது, ‘பாலசந்தர் படத்தில் நடிச்சிட்டு இருக்காரு’ என்றார்கள். கூர்மையான மூக்கு, நெற்றியில் விழும் தலைமுடி என்று துறுதுறுப்பாக இருந்தார். ‘இவர்தான் பரட்டை’ என முடிவு செஞ்சோம். படத்திற்கு ரஜினி ஐந்தாயிரம் சம்பளம் கேட்டார். ஆனால், மூவாயிரத்துக்குதான் ஒப்பந்தம் செய்தோம். இருப்பினும், கடைசியில் 2 ஆயிரத்து 500தான் கொடுத்தோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் ரஜினியும், கவுண்டமணியும் இணைந்து அதகளம் செய்திருப்பார்கள். ‘இது எப்படி இருக்கு’ என்று ரஜினி கேட்பதும், அதற்கு கவுண்டமணி கொடுக்கும் கவுண்ட்டரும் திரையரங்குகளில் கைதட்டலை அள்ளியது. இளையராஜாவின் இசை மற்றும் பாரதிராஜாவின் மேக்கிங் படத்தை வெள்ளிவிழா படமாக மாற்றியது. கிட்டத்தட்ட 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அதனால்தான் இப்போது வரைக்கும் கல்ட் படமாக ரசிகர்கள் மத்தியில் 16 வயதினிலே திரைப்படம் உள்ளது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் (செப்.15) வெளியாகி 46 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சப்பாணியும், மயிலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: "தனது அப்பா பெயரை பயன்படுத்தி அதர்வா ஏமாற்றுகிறார்" - தயாரிப்பாளர் மதியழகன் குற்றச்சாட்டு!