சென்னை: விஷால் வெங்கட் இயக்கியுள்ள 'ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி' என்னும் இணையத்தொடரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை அபிராமி, ராகவ், லிசி ஆண்டனி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த இணையத் தொடரில் நடித்த ஆகாஷ் பேசியதாவது, ''இந்த இணையத்தொடர் ரொம்ப நன்றாக இருக்கும். அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இந்த இணையத்தொடரை உருவாக்கியுள்ளோம்'' என்றார்.
நடிகர் ராகவ் பேசுகையில், "அனைவரும் ரத்தின சுருக்கமாகப் பேசுகிறார்கள், என் முகத்தை பார்த்தவுடன் தோன்றுகிறது. நான் கெட்டவனா? நல்லவனா என்று. அதனால் என்னை இந்தப் படத்திற்கு தேர்வு செய்தார்கள். எல்லா இடத்திலும் நம் ஒரு முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
இயக்குநர் விஷால் வெங்கட் பேசியது, "இந்த தொடர் சிறப்பான அனுபவமாக இருந்தது. கொடைக்கானல் போன்ற இடத்தில் குறுகிய காலத்தில் இணையத்தொடர் எடுக்க வேண்டி இருந்தது. அபிராமி, லிசி உள்ளிட்டவர்கள் திரை உலகில் அனுபவம் மிக்கவர்கள். அவர்களுடன் வேலை செய்தபோது எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. நாங்கள் 38 நாட்களில் இந்த சீரிஸ் எடுத்தோம்.
இதில் நடித்த சிறுவர்கள் மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார்கள். அவர்கள் மிகவும் சீக்கிரமாக கற்றுக்கொண்டு எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை இந்த சீரிஸ் தந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.
நடிகை அபிராமி பேசியது, ''இதுவரை நான் நடித்த எந்த ஒரு திரைப்படத்திற்கும் இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பு நடந்தது கிடையாது. இந்தப் படத்தின் கதையைப் படிக்கும்போது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதற்கான காரணம் ஒரு பெண்ணாக இருப்பதால் கூட இருக்கலாம்.
ஆனால், எந்த ஒரு படத்திற்கும் நான் முழுக் கதையை படித்து நடித்ததில்லை. ஆனால், இந்த தொடருக்கு முழு கதையையும் படித்துவிட்டு நடித்தேன். ஒரு இளம் விதவை, இரு குழந்தைகளை வைத்து என்ன செய்யப்போகிறார் என்பது தான் இந்தத் தொடரின் கதை. இந்த தொடரில் பெண்ணின் கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது” எனப் பேசினார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, ''முதல்முறை நான் ஓ.டி.டி பிளாட்பார்மில் இணையத்தொடரில் நடிக்கிறேன். முதல் எபிசோடை பார்த்தவுடன் அனைத்து எபிசோடும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. நான் நடித்ததற்காக சொல்லவில்லை. இந்த தொடரில் நடித்துள்ள சிறுவர்கள் கொலை செய்தார்களா இல்லையா, அந்த கொலையில் யாருடைய தொடர்பு உள்ளது என்பது தான் கதை'' என்றார்.
அதிக பட வாய்ப்பு கிடைக்கவில்லையா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நான் சிறிது காலம் தமிழ்நாட்டில் இல்லை என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாகவும், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் ஆறு படங்கள் நடித்து வருவதாகவும் கூறினார்.
தமிழில் நான்கு ப்ராஜெக்ட் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் இதற்குப் பிறகு சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நிறைய பார்க்கலாம் என்று கூறினார். ''விருமாண்டி'' படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, 'அன்னலட்சுமி தான் இறந்துவிட்டாலே. எப்படி பண்ண முடியும்?' என்றார்.
’கமல் சார் படம் பண்ணுவதாக இருந்து, என்னை கூப்பிடுவதாக இருந்தால், நான் எதற்கு வரமாட்டேன் என்று கூறப் போகிறேன். விக்ரம் படம் வெளிவந்ததற்குப் பிறகு அவரை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசினேன், அவருடைய விஸ்வரூபம், உத்தம வில்லன் படத்தில் டப்பிங் செய்துள்ளேன்'' என்றார்.
நயன்தாரா, ஜோதிகா போன்றவர்கள் பெண்கள் சார்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்தான செய்தியாளரின் கேள்விக்கு, ''பெண்களை சார்ந்த வார்த்தையை தவிர்க்க வேண்டும். ஆண் தலைமை தாங்கும் படத்தை ஆண் சார்ந்த படம் என்று சொல்வது கிடையாது. ஆனால், பெண் தலைமை தாங்கும் படத்தை பெண் சார்ந்த படம் என்று எடுத்து சொல்வது எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "ஒரு கோடை Murder Mystery" திரில்லர் வெப் சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!