சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சில் லியோ இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. விக்ரம் திரைப்பட வசூலை லியோ திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி லியோ பட வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி, சேட்டிலைட், வெளிநாட்டு உரிமம் என இதுவரை ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், எப்படியும் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதியில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த நிலையில், லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாதாரண திரையரங்குகளை விட ஐமேக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட திரையரங்குகள் அகன்ற திரைகளை கொண்டவை. இது பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். கடைசியாக ஜவான் படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லியோ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் இந்தியா கடந்து உலகம் முழுவதும் தனது மார்க்கெட்டை விரிவாக்க உள்ளார். மேலும், இங்கிலாந்தில் லியோ படத்திற்கான முன்பதிவு ஒரு மாதம் முன்பாகவே தொடங்கப்பட்ட நிலையில், 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தின் வியாபாரத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் - காரணம் என்ன?