சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் லியோ படம் அடுத்ததாக வெளிவர உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்து உள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய், நடிப்பு மட்டுமின்றி தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார். இது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
விஜய் சமீப காலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இதனால் தான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் செய்து வருகிறார் என்றும் பேசப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துமாறு தனது மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
இரவு நேர பயிலகம், விலையில்லா விருந்தகம் என ஏகப்பட்ட நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 5ஆம் தேதி) சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விஜய்யின் உத்தரவுப்படி மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றை மாவட்ட தலைவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெற்று தொகுக்க வேண்டும். பொதுநல வழக்குகள் பதிவு செய்யும் வழக்கறிஞர்களின் தகவல்களையும், அவர்களது வழக்குகளின் நிலை குறித்து கண்காணிக்க வேண்டும். தமிழக மக்களின் உரிமையை காக்கும் வழக்குகளில் மனுதாரராக இணைந்து அந்த வழக்கின் மூலம் மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: Jailer Pre-Booking: விறுவிறுப்பான முன்பதிவில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்!