சென்னை : சிறந்த நடிப்பாலும், வித்தியாசமான கதை தேர்வாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர், தற்போது இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் "ரத்தம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாகவும், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, Family man புகழ் மகேஷ், மீஷா கோஷல், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
தனித்துவமான முறையில், முற்றிலும் புதிய களத்தில் திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் என்டர்டெய்னராக "ரத்தம்" படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு கண்ணன் இசை அமைக்கிறார். தெருக்குரல் அறிவு ஒரு தீம் பாடலை எழுதி, அதனை பாடியுள்ளார். இன்ஃபினிட்டி ஃப்ளிம் வென்ச்சர்ஸ் சார்பில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா மற்றும் எஸ்.விக்ரம்குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. "ரத்தம்" படத்தை தயாரிக்கும் இதே "இன்ஃபினிட்டி ஃப்ளிம் வென்ச்சர்ஸ்" நிறுவனத்துடன் இணைந்து, 'கொலை' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற மேலும் இரண்டு படங்களிலும் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இந்த படங்கள் உள்பட, விஜய் ஆண்டனி நடிப்பில் சுமார் 6 திரைப்படங்கள் 2022இல் வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ராம்பாலாவின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது!