சென்னை: சென்னையில் உள்ள பிரசாத் லேபில், தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹிட்லர் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் தனா, இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
நடிகர் விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், “இயக்குநர் தனாவை படத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஆச்சரியமாகவே பார்க்கிறேன். கூடிய விரைவில் அடுத்த படத்தில் இணைத்து பணியாற்றுவோம். நடிகை ரியா சுமன் கதாநாயகி என்ற எந்த அலட்டலும் இல்லாமல், சாதாரண பெண்ணாகவே படப்பிடிப்புத் தளங்களில் இருந்தார். சில நேரங்களில் நேரத்தை எல்லாம் கருத்தில் கொண்டு, கூப்பிட்ட உடனே மேக்கப் இல்லாமல் கூட சில காட்சிகளில் நடித்து கொடுத்தார். தமிழில் இவ்வளவு அழகாக பேசுகிறார். விரைவில் பெரிய படங்களில் நடிக்க வாழ்த்துக்கள். இந்த வருடம் 3 படங்களில் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
3 படங்களுக்கு இசையமைக்க உள்ளேன்: சமீப காலமாக நடிகர் விஜய் ஆண்டனி காலனி அணிவது கிடையாது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “திடீரென மனதுக்கு தோன்றியது, அதில் இருந்து காலில் செருப்பு அணிவது இல்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது. மீன்டும் எப்பொழுது தோன்றுகிறதோ, அப்போது காலணியை பயன்படுத்துவேன்” என்றார்.
மேலும், புது மாப்பிள்ளை கிங்ஸ்லி கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை என கூறிய விஜய் ஆண்டனி, இந்த உடல் அமைப்பை எப்படி கொண்டு வந்தீர்கள்? நெல்சன் தோண்டி எடுத்துக் கொண்டு வந்தாரா என்று ரெடின் கிங்ஸ்லியிடம் கேட்க, அவர் நெல்சன்தான் தோண்டி எடுத்தார் என கலகலப்பாக பதிலளித்தார்.
இதனையடுத்து இயக்குநர் தனா பேசுகையில், “விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்புத் தளத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதனாலே படம் தள்ளிப்போனது. விபத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டும், தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தி படப்பிடிப்பை தள்ளிவைக்காமல் நடித்து கொடுத்தார்.
படிமங்கள் மூலம் கதை சொல்வது ஒரு கலை: உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன், விஜய் ஆண்டனி சார். தொழிலில் உண்மையாக இருக்கக்கூடிய நாயகன் நடிகர் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு படத்திலும் இயக்குநர்களை நடிக்க வைக்கிறேன் என்று படைவீரன் படத்தில் பாரதிராஜாவையும், வானம் கொட்டட்டும் படத்தில் பாலாஜி சக்திவேலையும், ஹிட்லர் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனையும் நடிக்க வைத்துள்ளேன். அதில் மிகவும் மகிழ்ச்சி.
குறியீடு மூலம் சொல்ல வேண்டும் என நினைத்து வைக்கப்பட்ட தலைப்புதான் ஹிட்லர் என்பதாகும். படத்தில் ஒரு இடத்தில் கூட ஹிட்லர் என்ற பெயர் வராது. படிமங்கள் மூலம் கதை சொல்வது ஒரு கலை. அந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கதைக்கு இந்த தலைப்பு சரியாக இருந்தது. அதற்காகத்தான் இந்த தலைப்பு” என்று கூறினார்.
நடிகை ரியா சுமன்: நடிகை ரியா சுமன் மேடையில் பேசுகையில், “இயக்குநர் மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். அதே பட்டறையில் இருந்து வந்துள்ள இயக்குநர் தனாவும், இப்படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். விஜய் ஆண்டனி திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான். இவர் படப்பிடிப்புத் தளத்தில் கோபப்பட்டு பார்த்ததே இல்லை, அற்புதமான மனிதர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: விடாமுயற்சி முதல் தங்கலான் வரை.. நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை 2024 முழு பட்டியல்!