சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு 'மங்காத்தா' என்ற பெரும் பிளாக்பஸ்டர் படத்திற்குப் பிறகு, தற்போது மாநாடு என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார். மாநாடு திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற மாறுபட்ட ஜானர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் பலவிதமான கருத்துகளைப் பெற்று வருகிறது. திரைக்கு வந்து வெங்கட் பிரபு 15 ஆண்டுகளைக்கடந்துள்ள நிலையில், தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
நாகசைதன்யா அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22ஆவது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 11ஆவது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம். கோலிவுட்டில் தொடர்ந்து படங்களை எடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் Srinivasaa Silver Screens, பல படங்களைக் கைவசம் வைத்துள்ளது.
அதில் ராம் போத்தினேனி உடைய “ தி வாரியர்”, போயபட்டி ஶ்ரீனு-ராம் இணையும் படத்துடன் தற்போது வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஶ்ரீனிவாசா சித்தூரி படத்தினை தயாரிக்க, பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார். பெயரிடப்படாத இந்தப் புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ்ப்படம் ஆகும். இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம், இப்படம் பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவின் திறமைக்குத் தகுந்த படியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கியமான நடிகர்களும், பிரபலமான தொழில்நுட்பக்கலைஞர்களும் சேர்ந்து ஒரு கமர்சியல் என்டர்டெயினராக, இப்படம் உருவாக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க:ராஷ்மிகாவின் ரகளை: கிரிஞ்சா.. கியூட்டா?