இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ’வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இருந்து வெளியான ’ரஞ்சிதமே’ மற்றும் ’தீ தளபதி’ ஆகிய இரண்டு பாடல்கள் தற்போது வரை பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளன. இதனையடுத்து விஜய் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்றுதான். ஏனென்றால் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் பேச்சிற்காக அவரது ரசிகர்கள் ஆவலாகக் காத்துக்கொண்டுள்ளனர்.
’மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழாவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ’பீஸ்ட்’ படத்திற்கு ஆடியோ விழாவே வைக்கவில்லை. எனவே இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆடியோ வெளியீட்டு விழா முடித்த கையோடு விஜய் தனது குடும்பத்துடன் லண்டன் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து ஜனவரி முதல் வாரம் சென்னை திரும்பும் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ’இனி வாரிசும் நாங்க தான், துணிவும் நாங்க தான்: ரெட் ஜெயண்ட் அதிரடி முடிவு