பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் முழுக்க புதுமுகங்கள் நடிக்கின்றனர். இதுகுறித்து குறித்து வேடியப்பன் கூறுகையில், "இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர்.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்களான குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்," என்றார்.
'வடக்கன்' படத்தை குறித்து இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறுகையில், "எழுத்தாளனாக எனது பணியை துவங்கினேன், பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது முதன் முறையாக ஒரு இயக்குநராக 'வடக்கன்' மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன். எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்றார். வடக்கன் படத்திற்கு கர்நாடக இசைக் கலைஞர் எஸ் ஜெ ஜனனி இசையமைக்க, ரமேஷ் வைத்யா இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் திரைப் பிரபலங்கள் - காரணம் என்ன?