சென்னை: அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார்.
ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார்கள். புலனாய்வு திரில்லர் ஜெனரில் உருவாகி உள்ள இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
ஜூன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய நிகிலா விமல், என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் 'போர் தொழில்' படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
குறிப்பாக முதன் முதலில் என்னிடம் கதை சொல்ல வந்த விக்னேஷ் ராஜா லெப்டாப்பில் இசையை ஒலிக்கவிட்ட வாறு கதை சொன்னார். அவரின் அந்த புது முயற்சியும், அனுகுமுறையும் என்னை வெகுவாக கவர்ந்தது எனவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் இந்த படத்தில் நடிக்க தான் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய, நடிகர் அசோக் செல்வன் , '' எனக்கு மிகவும் பிடித்த திரைக்கதை போர் தொழில்" என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 2015 ஆம் ஆண்டில் இப்படத்தின் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம் எனவும் இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும், விளம்பர படங்களிலும் பணியாற்றிருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் அதை கேட்பதற்கே நன்றாக இருக்கும் எனக்கூறிய அசோக் செல்வன் அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது எனவும் கூறியுள்ளார். இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.
ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன். இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார்.
காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.
என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது எனக்கூறியுள்ளார். மேலும் சமீப காலமாக மக்கள் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்த அசோக் செல்வன் நல்ல திரைப்படங்களை மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ‘யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது கனவு போலவே உள்ளது’; யூடியூபர் சசி