கோவை: இந்திய அளவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு படமான ''மைக்கேல்" பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. அந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, 'வருகின்ற பிப்ரவரி 1, 2, 3, நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அப்டேட் வருகிறது! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்' என கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்தவுடன் மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பி, அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டு வரும் படம் விஜயின் 67. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்பே எக்கச்சக்க எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்துள்ளது. காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கடந்த படமான விக்ரம், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, மாபெரும் வசூல் சாதனைப் படைத்திருந்தது.
அதேபோன்று, விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியான மாஸ்டர் திரைப்படமும் கரோனாவிற்குப் பிறகு மக்களை திரையரங்கம் நோக்கி படை எடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து பண்ணுவதால் அந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தச் சூழலில் கோவை கல்லூரி நிகழ்வில் கலந்துகொள்ள வந்தபோது அவர், 'தளபதி 67' என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:"நல்ல நண்பனை இழந்துவிட்டேன்" உதவி இயக்குநர் மரணம் குறித்து ஷாந்தனு உருக்கம்!