சென்னை: பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்துள்ள ’டாணாக்காரன்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று (மார்ச்.31) நடைபெற்றது. இந்நிகழ்வில் விக்ரம்பிரபு, இயக்குனர் தமிழ், அஞ்சலி நாயர், தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அப்படத்தின் இயக்குநர் தமிழ், “ என்னை நடிகராக அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுதான் எனது முகம். இப்படத்தில் அனைவரையும் கொடுமைப்படுத்தியுள்ளேன். ஆனால் வேண்டுமென்று இல்லை. கதைக்கு தேவைப்பட்டது. விக்ரம் பிரபு கடைசி பத்துநாள் என்னிடம் பேசவேயில்லை.
நான் பெற்ற கொடுமையை உங்களுக்கு கொடுத்துள்ளேன் :எல்லோரும் மன அழுத்தத்தில் வேலை செய்தோம். இந்தப் படத்தை எடுப்பதற்காக களம் தேடி தமிழ்நாடு முழுவதும் 50 கல்லூரிகள் சுற்றினோம். போலீஸ் பயிற்சியில் நான் பெற்ற கொடுமையை உங்களுக்கும் கொடுத்துள்ளேன் அனைவரும் மன்னித்துவிடுங்கள்” என்றார்.
முன்னதாக படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாகேஷ் எனும் இளைஞர் உயிரிழந்ததாக கூறி நாயகி அஞ்சலி நாயர் அவரின் இழப்பை நினைவு கூர்ந்து மேடையிலேயே பேசி கொண்டிருக்கும் போது கண்ணீர் விட்டு அழுதது மேடையில் இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வேலூரின் வெயில் பற்றி யாரும் கூறவில்லை: இதனையடுத்து இப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு பேசுகையில், “படப்பிடிப்பு மலைப்பகுதியில் நடப்பதாக சொன்னார்கள். ஆனால் வேலூரில் கொண்டுபோய் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் விட்டுவிட்டார்கள். வேலூர் பற்றி நிறைய பேர் சொன்னார்கள் ஆனால் வேலூரில் அடிக்கும் வெயில் பற்றி யாரும் சொல்லவில்லை. நல்லதா இருந்தாலும் சரி அடிப்பட்டாலும் சரி எல்லாமே ஒரு அனுபவம் தான். காவலர்களின் உளவியலை பேசும் படமாகவும் பரிதாபம் கலந்த மரியாதை ஏற்படுத்தும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார் சிவகார்த்திகேயன்'- ஞானவேல் ராஜா