சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. ஆனால் அதில் காட்சி நேரங்கள் குறித்து எதுவும் இல்லாததால் குழப்பம் நிலவியது.
இதனையடுத்து லியோ படத்துக்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். லியோ படத்துக்கு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிட வேண்டும் என்றும், இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு திரையிடவும் அனுமதி அளித்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ள அவர், திரையரங்குகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.