சென்னை: 77 ஆண்டுகள் பழமையான ஏவிஎம் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் படப்பிடிப்புத்தள வளாகத்தில், "ஏவிஎம் ஹெரிட்டேஜ்" என்ற பெயரில் சினிமா அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆரம்பகால திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு கருவிகள், கார்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
நடிகர் எம்ஜிஆர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.மெய்யப்பன், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்டோர் பயன்படுத்திய கார்கள் உட்பட 1910ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் திரைப்படங்களை காட்சிப்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட பழைமையான ஒளிப்பதிவுக் கருவிகள், ஆடியோ சாதனங்கள், ஃபிலிம் சுருள்கள், விளக்குகள் உள்ளிட்டவையும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மே.7) தொடங்கி வைத்தார். இதில், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சிவக்குமார், அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஏவிஎம் நிறுவனத்தின் பழமையான சுழல் உருண்டை மற்றும் பராசக்தி திரைப்படத்தின் நினைவுத் தூண் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த அருங்காட்சியகத்தில், செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.குகன், ''மீண்டும் திரைப்படத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், "இன்று ஏவிஎம்மின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஏவிஎம் ஸ்டூடியோ சுமார் 80 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்த ஸ்டூடியோவில் இருக்கும் பழமையான கருவிகளையும், பொருட்களையும் வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம்மின் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் பொழுது போக்காக இருக்காது, ஏவிஎம்மின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "ஒரு விருது கூட கொடுக்கல" 'க/பெ ரணசிங்கம்' குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!
இதையும் படிங்க: Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 வெளியிட நீதிமன்றம் அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்!