சென்னை: தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை. இவர், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். being woman என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி மார்கெட் பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த 9ந் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தனது மகள் குறித்து கபிலன் ’மகள்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால் நான் எப்படித் தூங்குவேன் .. !
- எங்கே போனாள் என்று தெரியவில்லை அவள் காலணி மட்டும் என் வாசலில் .. !
- மின் விசிறி காற்று வாங்குவதற்கா ... உயிரை வாங்குவதற்கா .. ?
- அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்.. !
- அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்குத் தெரியாது அவளே என் கடவுள் .. !
- குழந்தையாக அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது . கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா கண்களின் வலி.. !
- யாரிடம் பேசுவது எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.. !
- கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பியிருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு.. !
- பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்துவிட்டான்.. !
என்ற அந்த கவிதைகள் படிப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் உள்ளது.. !
இதையும் படிங்க: 'யாரையும் உருவத்தை வைத்து விமர்சிக்காதீர்கள்' - நடிகர் சிலம்பரசன்