சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனது உழைப்பை மட்டுமே நம்பி வந்து வெற்றிபெற்றவர். நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் நம்மாலும் கடினமாக உழைத்தால் உச்சத்தை தொடலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நடிகர்.
தனது படங்களால் அனைவர் மனதிலும் நம்ம வீட்டு பிள்ளையாக சிம்மாசனம் இட்டு இருப்பவர். இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூல் செய்து சாதித்தது. அதனை தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனாலும் அடுத்து எப்படியும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து விடுவேன் என்று ஓடிக்கொண்டு இருந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது மாவீரன் திரைப்படம்.
மண்டேலா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது மாவீரன். ஆக்சன் நிறைந்த ஃபேண்டஸி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பரத் சங்கர் இசை அமைத்து உள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனை, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை காசி திரையரங்கில் செண்டை மேளம் அடித்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் ரோகிணி மற்றும் காசி திரையரங்குகளுக்குச் சென்ற சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். காமிக் சித்திரம் வரையும் ஒருவரது வாழ்வில் நடக்கும் ஃபேண்டஸி விஷயங்களே மாவீரன் படத்தின் கதை. படத்தின் ட்ரெய்லரும் வித்தியாசமான முறையில் இருந்தால் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் நிச்சயம் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக படப்பிடிப்பு நடந்து வரும் அயலான் படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Mrunal Thakur: 'சீதா ராமம்' படத்தின் பிரின்ஸஸ் நூர்ஜகானின் கண்கவரும் புகைப்படங்கள்