சென்னை: நடிகர் சிம்பு, மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். பத்து தல, வெந்து தணிந்தது காடு, கரோனா குமார் போன்ற படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.
சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌதம் மேனன், "வெந்து தணிந்தது காடு" படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு இதுவரை நடிக்காத புதிய பரிமாணத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் கசிந்தன.
வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. மும்பையில் இன்னும் ஆறு நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும், சண்டைக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகளை எடுக்க டிஆர் கார்டனில் படக்குழுவினர் தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.
கௌதம் மேனன், தன் படங்களை ஆரம்பம் முதல் அழகாக எடுத்துச்சென்று கிளைமாக்ஸில் சொதப்பிவிடுவார் என்ற விமர்சனம் எழுவது உண்டு. அதனால், இந்தப் படத்தில் அதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் முழு வீச்சுடன் வேலை பார்த்து வருகிறாராம், கௌதம் மேனன். இதனால் படத்தின் கிளைமாக்சை எடுக்க மீண்டும் மும்பை செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போவதால், தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களில் முழுமையாக நடிக்க முடியவில்லை என சிம்பு புலம்புவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் பட நடிகையை மணக்கிறார் ரன்பீர் கபூர்!