சென்னை: தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளைப் பற்றி படம் எடுக்கும் இயக்குநர்கள் தற்போது மிகக் குறைவுதான். அவ்வாறு குடும்ப உறவுகளை மையமாக வைத்து பல படங்களை இயக்கியவர், ராசு மதுரவன். இவர் பிரசாந்த் நடித்த பூமகள் ஊர்வலம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோரிப்பாளையம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில், இயக்குநர் ராசு மதுரவன் கடந்த 2013ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
இவரது இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், மாயாண்டி குடும்பத்தார். பல இயக்குநர்களை வைத்து இவர் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது வரை அப்பா, மகன், அண்ணன், தம்பி பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திரைப்படமாக மாயாண்டி குடும்பத்தார் உள்ளது.
இந்த நிலையில், மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் சீமான், பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்ட அனைவரும் நடிக்க உள்ளனர்.
குடும்பங்களின் உறவுகளைப் பற்றி பேசிய முதல் பாகத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், தருண் கோபி, ரவி மரியா, பூங்கொடி, தீபா, இளவரசு, சிங்கம்புலி, ராஜ்கபூர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். யுனைடெட் ஆர்ட்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு, சபேஷ் முரளி இசையமைத்திருந்தனர்.
முதல் படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனமே, இரண்டாவது பாகத்தையும் தயாரிக்கிறது. முதல் பாகத்தின் இயக்குநர் ராசு மதுரவன் மறைந்து விட்டதால் புதிய கீதை, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.பி.ஜெகன் இந்த படத்தை இயக்குகிறார்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது. முக்கியமாக முதல் பாகத்தில் நடித்த மறைந்த கலைஞர்களைத் தவிர, அனைத்து நடிகர் நடிகைகளும் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளனர். குறிப்பாக இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், மாயாண்டி குடும்பத்தார் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தனுஷிடம் நான் என்னை பார்க்கிறேன்" - கேப்டன் மில்லர் விழாவில் சிவராஜ் குமார் பெருமிதம்!