ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து ராஷ்மிகா மந்தனா, “இணையத்தில் செயற்கை தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வைரலாகி வரும் deepfake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. இந்த விவகாரம் எனக்கு பயத்தை உண்டாக்குகிறது.
இன்று நான் ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களோடு பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால் இது என்னுடைய பள்ளி அல்லது கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால் எப்படி சமாளிப்பேன் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என கூறி இருந்தார்.
இந்த விவகாரத்தில் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர், சின்மயி உள்ளிட்ட பலர் ராஷ்மிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் வைரலான போலி வீடியோ சர்ச்சைக்கு பிறகு பொதுவெளியில் தோன்றியுள்ளார். அவருடன் நடிகர் ரன்பீர் கபூர், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் டி சீரியஸ் தலைமை அலுவலகம் சென்று திரும்பினர். ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் ஒரே காரில் சென்றனர். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'Animal' திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லேபில் வெப் தொடரில் அதிக ஆபாச வார்த்தைகள் - செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழு அளித்த பதில்!