சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் நடித்த 3 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாட்டு உலகம் முழுவதும் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ‘லால் சலாம்’ படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்படத்துக்கான இசைப் பணிகள் நடைபெற்று வந்த புகைப்படங்களை ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இப்படம் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதனால் கிரிக்கெட் விளையாட்டில் கை தேர்ந்த நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். தற்போது நடைபெற்று வரும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே கிரிக்கெட் பற்றி தமிழில் நிறைய படங்கள் வந்துள்ளன. விஷ்ணு விஷால் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார் என்றால் அவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'கபிலன் ரிட்டன்ஸ்' சார்பட்டா 2 அப்டேட் வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்!