சென்னை: பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
'ஆதிபுருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய அப்டேட்டுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக்குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில், ஆதிபுருஷ் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த 'ஆதிபுருஷ்' திரைப்படம், ஐமேக்ஸ் மற்றும் 3 டி யில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகிறது.
இதையும் படிங்க: நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின்