சென்னை: பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்துள்ளனர். 'ஆதி புருஷ்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் டீஸர் மற்றும் பிரமாண்டமான போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றது. ஆனால், இன்னொரு தரப்பு டீஸரில் கிராஃபிக்ஸ் சரியாக இல்லை என்றும் கார்ட்டூன் பார்ப்பது போல் இருப்பதாகவும் விமர்சித்தனர்.
இதனால் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாக இருந்த இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது தரமான கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று ராம நவமியை முன்னிட்டு ஆதி புருஷ் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள்.
தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள்.
டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இதையும் படிங்க: Ponniyin Selvan 2: இசை வெளியீட்டு விழாவில் ஷாக் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்.. சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கூறியது என்ன?
இதையும் படிங்க: "தஹி இல்லை தயிர் தான்".. பின் வாங்கிய மத்திய நிறுவனம்..