சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜயின் 67வது திரைப்படம் 'லியோ' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். விஜய் - த்ரிஷா ஜோடி ஏற்கனவே கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்தனர்.
மேலும் இந்த படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக விஜயின் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டது. மேலும் படத்தின் 2வது பாடலான 'Badass' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு துவண்டு போன ரசிகர்களை உற்சாகமூட்டியது.
லியோ டிரைலர் நாளை வெளியாக இருக்கும் சூழலில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதற்கான கொண்டாட்டடத்திற்கு காவல்துறை மறுத்துள்ளது. இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரோகிணி திரையரங்க இயக்குநர் ரேவந்த் சரண் லியோ டிரைலர் கொண்டாட்டம் குறித்து பதிவிட்டு, அதன் பின் நீக்கி உள்ளார். மேலும் திரையரங்க வளாகத்தில் கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திரையில் டிரைலர் வெளியிட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
வழக்கமாக விஜய் படங்களின் டிரைலர் வெளியாகும் வேளையில், ரோகிணி திரையரங்கில் அதற்கான கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். கடைசியாக வெளியான வாரிசு படத்தின் டிரைலர் வெளியிட்டின் போது, ஒரு படத்தின் முதல் நாள் காட்சிக்கு வருகைத்தரும் கூட்டம் அளவில், ரசிகர்கள் படை சூழ டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
ஏற்கனவே லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதில் சோகமடைந்த அவரது ரசிகர்களுக்கு, டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டத்துக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டதும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் டிரைலரை அந்தந்த பகுதி திரையரங்குகளில் உள்ள பார்க்கிங்கில் திரையிட காவல்துறை அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!