பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடித்த ’விவசாயி’ திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ’சீவலப்பேரி பாண்டி’ என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். ’வடிவேலு’, ’கஞ்சா கருப்பு’ உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மோகன்லாலுக்கு ரொம்ப பழக்கமானவராகவும் இருந்திருக்கிறார்.
மேலும், ’குட்டிமா’ என்ற குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். அதை அடுத்து இவரை ’குட்டிமா’ பாட்டி என்று அழைக்கத் தொடங்கினர்.
இவர் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரங்கம்மா பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக தனது சொந்தக்கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இதுவரை பல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் அவர் சம்பாதித்த பணம் அனைத்தையும் தன் குடும்பத்திற்கே செலவு செய்துள்ளார்.
வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் இன்றும் மறக்கமுடியாதவை. இந்நிலையில் இன்று(ஏப்.29) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: 'சின்னக் கவுண்டர்' வில்லன் நடிகர் 'சலீம் கவுஸ்' மறைவு - விஜயகாந்த் இரங்கல்!