தமிழில் இயல்பாகவே சங்க காலம் தொடங்கி இந்த காலம் வரை கவியையும், கவிதையையும் மக்கள் நேசித்து வருகின்றனர். அதுவும் திரைப்படங்கள் வர ஆரம்பித்த பின் இசையுடன் இணைந்த பாடல் வரிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த காரணத்தில்தான் தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களான கண்ணதாசன், வாலி என இன்றும் மக்கள் மனதில் அவர்களின் வரிகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் வந்தவர்தான் நா.முத்துக்குமார். காஞ்சி தந்த கவிமகன் 1500 பாடல்களில் எழுதிய வரிகளால் தமிழ் ரசிகர்களை வாரி அள்ளிக்கொண்டார். 1999 இல் தொடங்கிய இவரின் பயணம் இன்றும் பலரின் காதுகளின் வழியே தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
தமிழ் ரசிகர்களின் அனைவரது வீடுகளிலும் இவரின் பாடல்கள் ஒலிக்காமல் இருந்தது இல்லை. மனித உணர்வுகளின் ஊற்றாகத்தான் முத்துக்குமாரின் பாடல் வரிகள் இருந்துள்ளன. காதல், பிரிவு, தோல்வி, அன்பு, தாய்மை, நட்பு என அத்தனை உணர்வுகளையும் பாடல் வரிகள் மூலம் கடத்தக் கூடியவர். என்ன செய்து விட முடியும் ஒரு பாடலால்? உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை உருக வைக்க முடியும்.
அவரது பாடல்கள், இலக்கியத்தின் உச்சாணி கொம்பில் நின்று ஆடாமல் ஒருவனுக்கு எட்டுகின்ற மரக்கிளை போலவும், அதிலிருந்து சொட்டும் மழை நீர் அவனுக்கு தாகம் தீர்ப்பதும் போல இருந்தன. உலக வாழ்க்கையை அரை நொடியில் ஆணி அடித்து விளங்க வைத்தது இவரின் வரிகள், ‘உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்” என யுவனின் குரலில் இந்த வார்த்தைகள் போதும் ஒட்டுமொத்த வாழ்வின் அடிப்படையை உணர்த்தும்
காதலின் ஊற்று:காதலின் அத்தனை படிநிலைகளையும் அழகாக இவரது பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு தலைக்காதல், ஏக்கம், பிரிவு, காயம், காதல் தோல்வி, ஏமாற்றம் என எத்தனை வரிகள், எத்தனை பாடல்கள். இந்த உலகத்தில் தமிழ் வாழும் வரை முத்துக்குமாரின் வரிகளும் வாழும். யுவன் மற்றும் முத்துக்குமார் இணைந்து அதிகமான பாடல்களை தந்துள்ளனர்.
முத்துக்குமார் இத்தனை முறை காதலிக்க வைத்து, கொண்டாட வைத்து, அழுக வைத்து, தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பில் வாழ்ந்து விட்டு சென்றார். 2016 இல் தமிழ் சினிமாவின் பாடலாசிரியர் என்ற பட்டத்தை தாண்டி உயிர்களின் ஆன்மாவை காதலித்த முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் உயிரிழந்தார். இவரின் இழப்பு தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே பெரும் இழப்பாகி போனது.
முத்துக்குமாருக்கு முத்துக்குமார்தான் இணை எனும் சொல்லும் அளவிற்கான எதார்த்தமும், இயல்புகளும் நிறைந்திருந்தன இவரது வரிகளில். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை இரண்டு முறை தனதாக்கியவர். இவரின் ‘ மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட ஒரு அழகு’ வரிகள் சுட்டெரிக்கும் சூரியனையும் ரசிக்க வைத்தன.
இவர் மீட்டிய ஆனந்த யாழின் ஒலி இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தாய் பாசத்தை தூக்கி பிடித்த தமிழ் சினிமாவில், ‘தாலாட்டும் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே’ என புதுமை புகுத்தினார். இத்தனை வரிகளுக்கும் சொந்தகாரனான நா.முத்துக்குமாரை ரசிகர்கள் இன்றும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்"..இயக்குநர் பாலாவுக்கு இன்று பிறந்தநாள்...