சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நடத்துவது அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி வித்யாசாகர் வரை பலரும் பல்வேறு ஊர்கள், நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான், விஜய் ஆண்டனி, வித்யாசாகர், தேவா, இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என பலரும் இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறாக, சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் ஏராளமான போலி டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்து வைக்கப்பட்டனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.ரகுமான் மீது குற்றம்சுமத்தினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பு டிக்கெட் பணத்தை திருப்பி அளித்தது. இதனையடுத்து இசை நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டன.
சமீபத்தில் கூட புதுச்சேரியில் இளையராஜா நடத்த இருந்த இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்காக காரணங்கள் தெரியவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியானது (Rock On Harris Live In Concert) திட்டமிட்டபடி நாளை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சிஏ மைதனாத்தில் நடைபெற உள்ளது. இதற்காகன ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சென்னை காவல் துறையில் அனுமதி கோரிய நிலையில் தற்போது, கடும் கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் என்ன?: 'சுமார் 20,000 பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை, 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது' என காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை இன்று (அக்.26) கூறியுள்ளதாவது, 'இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும். இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பார்வையாளர்களுக்கு தேவையான இருக்கைகளை ஏற்பாடு செய்யபட வேண்டும், வாகனம் நிறுத்துவதற்கு தேவையான வாகன நிறுத்தம் வசதி, நிகழ்ச்சி செய்யும் இடத்திலும், போதுமான காற்று வசதி செய்து கொடுக்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: யோகி பாபு மகளின் பிறந்தநாளுக்கு முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கிய விஷால்!