மும்பை: பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கடந்த 1998ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு அர்ஹான் என்கிற மகன் உள்ளார். சில ஆண்டுகளிலேயே இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து மலைக்காவுக்கும், பாலிவுட் முன்னணி நடிகரும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. மலைக்கா அர்ஜுன் கபூரைவிட 12 வயது மூத்தவர். இருவரும் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வயது வித்தியாசத்திற்காக சமூக வலைதளங்களில் பலரும் இவர்களை கலாய்த்து தள்ளினாலும், அதை பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்து கொள்வார்கள்.
இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் கபூர், தனது காதலியான மலைக்கா அரோராவின் 49ஆவது பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், "ஹேப்பி பர்த்டே பேபி, நீ நீயாக இரு, மகிழ்ச்சியாக இரு, என்னுடையவளாக இரு..." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள மலைக்கா, "உங்களுடையவள் மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள், கமென்ட்டில் மலைக்காவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜப்பான் வீதிகளில் காதல் உலா வந்த ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்